தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த 24 மணி சேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களின் ஓரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, வட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் நிலவும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அக்டோபர் 1 முதல் இன்று வரை பதிவான மழையின் நிலவரம் குறித்து தகவல் தெரிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 43 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 40 செ.மீ மழை பதிவாகும். எனவே, இது இயல்பை விட 6% அதிகம். சென்னையை பொறுத்தவரை 58 செ.மீ மழை கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் 68 செ.மீ மழை பதிவாக வேண்டும். இதன்படி, தற்போது 14% அளவு குறைவான மழை பதிவாகியுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் 30 சதவீதமும், வேலூர் மாவட்டத்தில் 25 சதவீதமும் மழை குறைந்துள்ளது, என தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: