×

இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது, மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும், எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் என்றார். சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்ததாக தெரிவித்தார். அடுத்து வரும் நாட்களில் தமிழகத்திலேயே 25,000 மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும் என குறிப்பிட்டார்.

வெங்காயம் விலை அதிகரிக்கும் பட்சத்தில் நகரும் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் எனக் கூறினார். மேலும், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், விரைவில் அது தமிழகத்திற்கு வந்துவிடும் எனவும் குறிப்பிட்டார். கடந்த ஒரு மாதத்தில் 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம், கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெங்காயத்தை பாதுகாக்க கிடங்குகள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags : Egypt ,Minister ,Selur Raju , Heart Disease, Egypt Onion, Minister Selur Raju
× RELATED முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...