×

ஜார்க்கண்ட் 3-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 1 மணி நிலவரப்படி 45.14 சதவீத வாக்குகள் பதிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று 3 கட்ட தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்  தாஸ் பாஜக  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5  கட்டங்களாக  இந்த தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். டிசம்பர் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு,  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஆர்வத்துடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் உள்ளனர். பிற்பகல் 1 மணி வரையிலும் 45 புள்ளி 14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்தும்  வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட  40,000 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Tags : phase ,Jharkhand , High turnout in Jharkhand 3rd phase: 45.14% turnout
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்