ஏழாயிரம்பண்ணையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்: கட்டுமானப் பணி முடிந்து காத்துக் கிடக்கிறது

சாத்துார்: ஏழாயிரம்பண்ணை தேவர் நகரில் கட்டி முடிக்கப்பட்ட,  பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேவர் நகர் மற்றும் சுந்தரம் நகரில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். இங்குள்ள தேவர் நகர்  மற்றும் சுந்தரம் நகரில் பொதுமக்கள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்படுகின்றனர். தெருக்களில் வாறுகால் வசதியில்லை; ஒரு சில  தெருக்களில் இருக்கும் வாறுகால்களும் தூர்ந்து கிடக்கின்றன. கழிவுநீர் தேங்கி தெருவில் தேங்குகிறது. இதை பள்ளி மாணவர்கள் மிதித்து செல்லும்  அவலம் உள்ளது.

கழிவுநீர் கலக்கும் ஓடையில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது.  பொதுமக்கள் பலருக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. ஆண்கள், பெண்களுக்கான இலவச கழிப்பறை இல்லை.  திறந்தவெளி கழிப்பிடத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. வாறுகால் கழிவை அள்ளி வீதியில் கொட்டுகின்றனர். தேவர் நகரில் ஒன்றிய  பொதுநிதியில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் தேவர் நகர்,  சுந்தரம் நகர் பகுதிக்கு தேவையான தெருவிளக்கு, கழிப்பறை, சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் முறையாக செலுத்துகிறோம். குடிநீர் வரி  கட்டவில்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கின்றனர். ஆனால், சாலை வசதியில்லை. கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியில்லை.  தெருவிளக்குகள் இல்லை. இரவில் நடந்து செல்ல அச்சமாக உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை  வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.Tags : Seyyirampanni , Unused sanitary,complex, Seyyirampanni, underway
× RELATED குஜராத் மாநிலம் சூரத்தில் 10 மாடிகள்...