சிவகாசி எட்டாவது வார்டு பகுதியில் எட்டாத அடிப்படை வசதி: அச்சுறுத்தும் சாய்ந்த மின்கம்பம்

* தூர்வாரப்படாத வாறுகால்கள்
* தெருக்களில் தேங்கும் குப்பைகள்

சிவகாசி: சிவகாசி 8வது வார்டில் போதிய அடிப்படை வசதியில்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாறுகால்கள் தூர்வாரப்படவிலை.  தெருக்களில் குப்பைகள் தேங்குகின்றன. குடியிருப்பு பகுதியில் சாய்ந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் வாழ்கின்றனர். சிவகாசி நகராட்சியில் உள்ள 8வது வார்டில் ஞானகிரி ரோடு, காரனேசன் காலனி, கருப்பணன் தெரு, கல்லறை தெரு, பிகேஎஸ்ஏ ரோடு ஆகிய  பகுதிகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டுக்கு வரும் நகராட்சிப் பணியாளர்கள்  வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிப்பதில்லை. இதனால், பலர் தெருக்களில் குப்பை கொட்டுகின்றனர். வாறுகால்களை மாதக்கணக்கில்  தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தெருக்களில் தேங்கி நிற்பதால்  சுகாதாரக்கேடு உண்டாகிறது. குப்பைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு:காரனேசன் காலனியில் உள்ள நகராட்சி பூங்கா ஒரு ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் இந்த பூங்காவில் கழிவுகளை கொட்டி உரம்  தாயாரிக்கும் உரக்கிடங்கை கட்டியுள்ளது. இங்கு ஓட்டல்  இழைகள் மற்றும் மட்கும் குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால்  பூங்காவை  சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கருப்பணன் தெருவில் சாலை மோசம்:இந்த வார்டில் கருப்பணன் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால், சாலையில் கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.  வாகனங்கள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் சைக்கிள், டூவீலரில் செல்லும்போது சாலையில் தவறி விழுந்து அடிக்கடி  விபத்துகுள்ளாகி வருகின்றனர். இங்குள்ள கல்லறை தெருவில் வாறுகால் தூர்ந்து கிடக்கிறது. இதனால், கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. குடிநீர் 8  நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே விநியோகிக்க படுவதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. கருப்பணன் தெருவில் வீடுகளுக்கு நடுவே உயர் மின்  அழுத்த மின்சார லைன் செல்கிறது. இதில், ஒரு மின்கம்பம் பாதி சாய்ந்தநிலையில் அந்தரத்தில் நிற்கிறது. மழை காலங்களில் பலத்த காற்று  வீசினால் மின்கம்பம் சாய்ந்து அருகில் உள்ள வீட்டின் மேல் விழும் ஆபத்து உள்ளது. உயர்மின் அழுத்த வயர் என்பதால் ஏதேனும் அசாம்பாவிதம்  ஏற்பட்டால் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகளிடம், குடியிருப்புவாசிகள் பலமுறை புகார்  தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தெருவில் மையப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இங்கு இறைச்சி கழிவுகள்,  கெட்டுப்போன பொருட்களை வீசி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு வீடுகளுக்குள் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.  நகராட்சி சுகாதார பணியாளர்கள் இந்த கழிவுகளை அகற்ற முன்வருவதில்லை. எனவே, 8வது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து 8வது வார்டு அசோக் கூறுகையில், ‘கருப்பணன் தெருவில் கடந்த 2011ம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய  சாலையோ, சீரமைப்பு பணியோ நடைபெறவில்லை. சாலை மோசமாக உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.  கற்கள் பெயர்ந்து மண்சாலையாக உள்ளதால் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. வாறுகால் மாதக் கணக்கில் அள்ளப்படாததால் சுகாதாரக்கேடு  ஏற்படுகிறது. வாறுகாலில் புழுக்கள் ஊர்ந்து செல்கிறது. நகராட்சி சுகாதார பணியாளர்கள் வாகனங்களில் வந்து வீடுகளில் ஒரு நேரம் மட்டும்  குப்பைகளை வாங்கி செல்கின்றனர். தெருக்களில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசி பொதுமக்கள்  அவதிப்படுகின்றனர். வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்’ என்றார்.

Tags : Sivakasi ,Eighth Ward, Unreachable, Tilt Wire
× RELATED பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு...