×

11 ஆண்டுகளுக்கு பிறகு பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டுக்கோட்டை: தினகரன் செய்தி எதிரொலியால் பூலாங்கன்னி ஏரியில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளது.பட்டுக்கோட்டை அடுத்த முதல்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது பூலாங்கன்னி ஏரி. இந்த ஏரி மிகவும் பழமை வாய்ந்த ஏரி. இந்த ஏரி 15 முதல் 20 ஏக்கர்  பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் தான் தண்ணீர் வந்து சேரும். இந்த ஏரி மூலம் பூலாங்கன்னி கிராமத்தில்  175 ஏக்கர் பாசன வசதி பெறும். நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் 1,563,37 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த பூலாங்கன்னி ஏரிக்கு நாடியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிவக்கொல்லை பகுதியில் ஓடும் நைனான்குப்பம் தாய் வாய்க்கால் மூலம் தான்  தண்ணீர் வந்து சேரும் என்ற நிலைமை இருக்க தமிழக அரசோ அல்லது சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, மாவட்ட நிர்வாகமோ  இதுவரை பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தாண்டு வழக்கத்தைவிட இதுவரை டெல்டா மாவட்டத்தில் மழையும் கூடுதலாகவே பெய்தும்கூட பூலாங்கன்னி ஏரியில் சிறிதளவு தண்ணீர்  மட்டுமே உள்ளது. சிவக்கொல்லை பகுதியில் ஓடும் நைனான்குப்பம் வாய்க்கால் புதர்கள் மண்டி காடுபோல காட்சியளிக்கிறது. நைனான்குப்பம்  வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் செல்லும் மதகுகளை சரி செய்து பூலாங்கன்னி ஏரிக்கு தண்ணீர் நிரப்ப வேண்டுமென விவசாயிகளின் கோரிக்கை  செய்தி தினகரன் நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. மேலும் விவசாயிகள் பூலாங்கன்னி ஏரிக்குள் இறங்கி ஒப்பாரி போராட்டமும்  நடத்தினர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 2008ம் ஆண்டு தான் பூலாங்கன்னி ஏரி நிரம்பியது. அப்போது தான் ஒருபோக சாகுபடி செய்தோம்.  கடந்த 11 ஆண்டுகளாக இந்த பூலாங்கன்னி ஏரிக்கு தண்ணீர் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் ஒருபோக சாகுபடிகூட செய்ய முடியாமல் தவித்து  வந்தோம். இந்நிலையில் இன்றைய தினம் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பூலாங்கன்னி ஏரி நிரம்பியுள்ளது. இதனால் நாங்கள் இந்தாண்டு ஒருபோக  சாகுபடி செய்வது நிச்சயம். இதற்கு முழு முக்கிய காரணம் தினகரன் நாளிதழ் தான். தினகரன் நாளிதழில் வந்த செய்தி எதிரொலியாக இந்த ஏரியில்  தண்ணீர் நிரப்புவதற்காக நாடியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிவக்கொல்லை பகுதியில் ஓடும் நைனான்குப்பம் வாய்க்காலை தூர்வாரி அந்த  வாய்க்கால் மூலம் பூலாங்கன்னி ஏரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் முழுமையாக கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

இன்னும் 2 மாதத்துக்கு இந்த தண்ணீர் தொடர்ந்து வருவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு  செய்யும்பட்சத்தில் நிச்சயமாக நாங்கள் அறுவடை செய்து விடுவோம். அதுமட்டுமல்லாமல் வரும் கோடை காலத்தில் இந்த பூலாங்கன்னி ஏரியை  முழுமையாக தூர்வாரினால் இனி எந்த காலத்துக்கும் தண்ணீர் பிரச்னை இருக்காது. எனவே வரும் கோடை காலத்தில் பூலாங்கன்னி ஏரியை  முழுமையாக தூர்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இதைதொடர்ந்து இந்த பூலாங்கன்னி ஏரி மூலம் வந்த தண்ணீரால் இன்று பயிர் வந்துள்ளது. இதுபோன்று ஒரே மாதிரி பசுமையான பயிரை பார்த்து 11  ஆண்டுகளாகிறது என்றனர்.Tags : Poolanganni Lake , water , Poolanganni , water, farmers, happiness
× RELATED என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்