×

ஓடும் பஸ்சில் இருந்து கழன்று ஓடிய டயர்: தேனி அருகே பரபரப்பு

தேனி: தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றுப்பாலம் பகுதியில் ஆண்டிபட்டியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் இருந்து  டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆண்டிபட்டியில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் அரசு டவுன்பஸ் ஒன்று தேனி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த டவுன்பஸ் தேனி அருகே குன்னூரில் பயணிகளை இறக்கி, அங்கிருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. குன்னூர் வைகை  ஆற்றின் பாலத்தில் சென்றபோது, பஸ்சின் பின்புறம் ஒருபக்கத்தில் இருந்த இரண்டு டயர்களில் ஒரு டயர் திடீரென கழன்று சாலையின் முன்பாக  ஓடியது. இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து சப்தமிடவே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.இந்நிலையில் பஸ்சில் இருந்து கழன்று ஓடிய பஸ்சின் டயர் சற்று தொலைவில் சென்று விழுந்தது. அப்போது எதிரே எந்த வாகனத்தில் யாரும்  செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி ஏற்படாமல் போனது.

தேனி மாவட்டத்தில் அரசு போக்குவத்துக் கழக பணிமனைகளில் அரசு பஸ்கள் சரிவர பாராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து  இருந்து வருகிறது. பஸ்களில் சீட்டுகளில் ஆணிகள் துருத்திக்கொண்டு பயணிகளை பதம்பார்ப்பதாகவும், பக்கவாட்டு கண்ணாடிகள் மோசமாக  இருப்பதாகவும், படிக்கட்டுகள் எப்போது விழும் என்ற நிலையில்லாமல் இருப்பதாகவும், பஸ்களின் டயர்களில் முறையாக பட்டன் இல்லாமல்  ஓடுவதாகவும், பஸ்களின் டயர்களை பொருத்தக்கூடிய போல்ட் நட்டுகள் தரமற்றதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.மேலும், பல பஸ்களில் பிரேக் சரிவர பிடிப்பதில்லை. முகப்பு விளக்குகள் எரிவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆனால்  போக்குவரத்து நிர்வாகங்கள் இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பேருந்துகளை இயக்கி வருகிறது.

தேனி அருகே நேற்று ஆள்நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாத நேரத்தில் பஸ்சின் டயர் கழன்று சென்றதால் உயிர்பலி ஏற்படுவது  தவிர்க்கப்பட்டுள்ளதால் அரசு போக்குவரத்துக் கழகம் இதனை எச்சரிக்கையாக கருதி அனைத்து பஸ்களையும் முறையாக பராமரித்து, பயணத்திற்கு  அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : , tire , ran , bus:
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...