ஏர்வாடி அரசு பள்ளியில் ஓராண்டுக்குள் புதிய வகுப்பறை தளங்கள் பெயர்ந்து விஷஜந்துகளின் கூடாரமாக மாறியது: மாணவிகள் அச்சம்

ஏர்வாடி: ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திறக்கப்பட்ட ஓராண்டுக்குள் புதிய வகுப்பறை தளம் பெயர்ந்து விஷஜந்துகளின்  கூடாரமாக மாறியுள்ளது. அவ்வவ்போது பூச்சிகள் வெளியே வருவதால் மாணவிகள் அச்சத்துடனே பாடம் படிக்கும் நிலை உள்ளது. ஏர்வாடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை  சுமார் 960 மாணவிகள் படித்து வருகின்றனர்.  ஏர்வாடி, சீனிவாசபுரம், ஆலங்குளம், கோதைசேரி, ராமகிருஷ்ணாபுரம், கோசல்ராம் நகர், தளவாய்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து  மாணவிகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 29 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.  இந்த கட்டிடத்தை கடந்தாண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் ஓராண்டுக்குள் புதிய கட்டிடத்தில் தரைதளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ்கள் பெயர்ந்து காட்சியளிக்கின்றன. குறிப்பாக கணினி ஆய்வகம்  மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையில் பெயர்ந்து கிடக்கும் தரைதளத்தின் இடைவெளியை பாம்பு, பூரான், ஓணான் போன்ற விஷஜந்துகள்  கூடாரமாக்கியுள்ளன. அவ்வவ்போது இவை வெளியே வருவதால், மாணவிகள் அலறியடித்து ஓட்டம் எடுக்கும் சம்பவம் நடந்துள்ளன. மேலும்  தினமும் எப்போது பூச்சிகள் வெளியே வருமோ? என அச்சத்துடனே படிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மெர்சி மேரி தங்கரற்றினத்திடம் கேட்டபோது, நான் தற்போதுதான் வந்துள்ளேன். இதுகுறித்து உயரதிகாரியிடம்  தெரிவித்து உள்ளேன். நாங்குநேரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆய்வு செய்து சென்றுள்ளார். அரையாண்டு விடுமுறையில் சரிசெய்து  கொடுப்பதாக அவர் கூறியுள்ளார், என்றார்.

2 கோடியே 29 லட்சம் செலவு செய்தும் தரமற்ற முறையில் வகுப்பறைகளாக கட்டியதற்கு திமுக நகர செயலாளர் அயூப்கான், ஏர்வாடி தமுமுக நகர  செயலாளர் அண்ணாவி அன்வர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கால தாமதமின்றி நடவடிக்கை மேற்கொண்டு  பெயர்ந்து கிடக்கும் வகுப்பறை தளங்களை சரி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories: