காரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு: குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்

காரைக்குடி: காரைக்குடி செக்காலை ரோட்டில் இருக்கும் பழைய வீட்டை, குடிமகன்கள் மது அருந்தும் பார் ஆக மாற்றி வருகின்றனர்.  இதனால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர்.காரைக்குடி நகரில் 12க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு சில கடைகளில் பார் வசதி உள்ளன. மற்ற கடைகளில் பார் வசதி  இல்லை. இதனால், மது வாங்கும் குடிமகன்கள் திறந்தவெளிகளை பார் ஆக மாற்றி வருகின்றனர். குடிமகன்களின் கும்மாளத்தால் நடந்து செல்லும்  பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

நகரில் உள்ள செக்காலை ரோடு அள.ராம தெருவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.  இந்த தெருவில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த தெருவில் யாடும் வசிக்காத பழைய வீடு ஒன்று உள்ளது.  இந்நிலையில், மது வாங்கி வரும் குடிமகன்கள், பழைய வீட்டில் முன்பகுதி திண்ணையில் அமர்ந்து ‘பார்’ போல குடித்து வருகின்றனர். காலி  மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். இதனால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே,  குடிமகன்களின் கொட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: