தூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரம் வளரும் பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம்: விரைவில் அகற்றப்படுமா?

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி  மாவட்டத்தில் சாலையோரம் வளர்ந்துள்ள பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம்  நிலவுவதால் அவற்றை அகற்ற நடவடிக்கை  எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி  மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக தொழிலாக திகழ்கிறது. மாவட்டத்தில்  திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, பழையகாயல்,  முள்ளக்காடு,  அத்திமரப்பட்டி, முத்தையாபுரம், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, காலாங்கரை,  குலையன்கரிசல், சாயர்புரம் உள்ளிட்ட அநேக  பகுதிகளில் விவசாயம்  செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், காய்ந்திருந்த  பார்த்தீனிய விதைகள் முளைக்க தொடங்கியுள்ளன. நச்சுத்தன்மை கொண்ட இச்செடிகள்  விளைநிலங்களில் பயிர்களோடும்,  தரிசு  நிலங்களிலும், சாலையோரங்களிலும் அதிகமாக வளர்ந்துள்ளன. மற்ற செடிகளின் வளர்ச்சியை தடுத்து  அதிகளவில் வளர்வதால் பயிர்களுக்கும் ஆபத்தாக விளங்குகிறது.

ஒரு செடி 2000 முதல் 5000 வரையிலான  விதைகளை உருவாக்குகிறது. இச்செடிகள் பொதுமக்களுக்கு  ஆபத்தை விளைவிக்ககூடியதாகும். செடியை  தொட்டால் தோலரிப்பு, தடிப்பு, சொறி, கரப்பான்  போன்றவை உண்டாகிறது. இதன் பூக்கள் வெடித்து  காற்றில் கலந்து விட்டால் அந்தபகுதியாக  செல்வோருக்கு  அலர்ச்சி, ஆஸ்துமா,  தோல் நோய்கள் ஏற்படும். கொத்தமல்லி செடி  போலவே காணப்படும் இந்த செடிகள் வெளிப்படுத்தும்   கார்பன்டை ஆக்ஸைடு சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கும்  விவசாயிகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும். விளைநிலங்களில் வளர்ந்துள்ள  பார்த்தீனிய செடிகளை கண்டறிந்து தீயிட்டு அழிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை   எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: