கடையம் அருகே பலமான தடுப்பு அமைக்காததால் கல் தடுப்பணைகள் உடைந்து தண்ணீர் வீணானது: விரயமாகும் மக்கள் வரிப்பணம்

கடையம்:  கடையம் பகுதியில் நீர்வழித்தடங்களில் அமைக்கப்பட்ட கல் தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. தடுப்பணை  பணிகள் முறையாக நடைபெறாததால் மக்கள் வரிப்பணம் விரயமானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடையம் யூனியனில் உள்ள 23 ஊராட்சிகளில் கிணறு, ஆழ்த்துளை கிணறு, நிலத்தடி நீர் ஆகிய நீர்வள ஆதாரங்களை அதிகரிக்க நீர்வழித்தடங்களில்  சிமென்டால் ஆன தடுப்பணை, கல் தடுப்பணை, வலையுடன் கூடிய கல் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு நிதி  ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் பொட்டல்புதூர் ஊராட்சியில் வெள்ளிகுளம் -பாப்பான்குளம் செல்லும் சாலை அருகே  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி  திட்டம்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  சார்பில் ரூ.2.77 லட்சம் செலவில் பச்சேரிகுளம் கால்வாயில் கட்டப்பட்ட கல் தடுப்பணை, கடந்த  சில நாட்களாக பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் அணையின் ஓரப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

இதேபோல் கீழ்உடைப்பான்குளம் கால்வாயில் ரூ.1.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல் தடுப்பணை சைடு மண் தடுப்பும் தண்ணீரில் அடித்துச்  செல்லப்பட்டு உள்ளது. இங்கு அடுக்கி வைக்கப்பட்ட கற்களும் உள்வாங்கி சேதமடைந்துள்ளது. தடுப்பணைகளின் ஓரப்பகுதியில் மண் தடுப்பு பலமாக  அமைக்காததால்தான் விரைவில் உடைந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீர்வழித்தடங்களில்  தடுப்பணைகள் கட்டியதன் நோக்கமே தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்துவதுதான். ஆனால் தற்போது அணைகளில்  ஏற்பட்டுள்ள உடைப்பால் அந்த நோக்கமே தோல்வி அடைந்துள்ளது. பெயரளவில் கற்களை அடுக்கி வைத்து அதன் மூலம் நீரை சேமிப்பது என்பது  நிரந்தர தீர்வாகாது. கனமழைக்கு இதுபோன்ற கல் தடுப்பணைகள் தாக்குப்பிடிக்க முடியாமல் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு முற்றிலுமாக  உடையும் அபாயநிலை உள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும் இதற்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம்  விரயமாகியுள்ளது. நீர்வழித்தடங்களில் சிமென்டால் ஆன பலமான தடுப்பணைகள் அமைப்பதன் மூலமே தண்ணீரை சேமிக்க முடியும். நீண்ட  காலங்களுக்கும், வெள்ள நீருக்கும்  சிமென்ட் தடுப்பணைகள் தாக்குப்பிடிக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

தற்போதைய காலக்கட்டத்தில் இதுபோன்ற தடுப்பணைகள் தேவையில்லை என்றாலும், அரசின் கட்டாயத்தால் வேறு வழியின்றி அதிகாரிகளும்  தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை முடித்துவிட எங்கேயாவது அமைத்து விடுகின்றனர். இந்த தடுப்பணைகள் குறித்து நிறை குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. எனவே தென்காசி கலெக்டர், பணிகளை ஆய்வு செய்து தேவையான இடங்களில்  முறையான தடுப்பணைகள் அமைத்து மத்திய அரசு கொடுக்கும்  நிதிகளை முறையாக செலவழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமான தடுப்பணைகள் சீரமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு  மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அறிவிப்பு பலகையில் முழு தகவல் இல்லை?

மத்திய அரசு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தடுப்பணை பணிகள் அனைத்தும் பணியாளர்கள் கொண்டுதான் அமைக்க வேண்டும். ஆனால் இவை  அனைத்தும் இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால் 100 நாள் திட்டப் பணியாளர்கள், வேலை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு  உள்ளனர். இந்த கல் தடுப்பணைகள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் பல தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.  இதில்  எழுதப்பட்ட தொகை முழுவதும் முறையாக பயன்படுத்தப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: