×

தெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் எனவும் கருத்து

டெல்லி: தெலுங்கானா  என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா  என்கவுன்ட்டர்  உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுன்ட்டா் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வு குழுவை தெலங்கானா மாநில அரசு அமைத்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்தபடி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்பூர்கர் வெளிப்படையான விசாரணையை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், முன்னாள் நீதிபதி ரேகாபிரகாஷ் ஆகியோர் விசாரணைக்குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நடத்தி வரும் அனைத்து விசாரணைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை வேறு எந்த நீதிமன்றமோ, அமைப்போ விசாரிக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா என்கவுன்ட்டர் சம்பவம்:

ஹைதராபாத் அருகே கடந்த 28ம் தேதி பெண் கால்நடை மருத்துவா் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக, லாரி பணியாளா்கள் 4 பேரை போலீஸார். கைது செய்தனா். அதையடுத்து குற்றம் நடைபெற்ற இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக, கைதான 4 பேரையும் சம்பவ இடத்துக்கு போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனா்.

அங்கு போலீஸாரிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்து சுட்டதாகவும், மேலும் கற்களை வீசித் தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்பியோட முயன்றதாகவும், அதனால் அந்த நால்வரையும் போலீஸார் சுட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Tags : Telangana Encounter ,Supreme Court Supreme Court ,Telangana , Telangana, Encounter, 6 months, trial, completion, Supreme Court order
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து