×

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று ரிட் மனு தாக்கல்

புதுடெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல் செய்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான  துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த  மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு  குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜ கட்சிக்கு   பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். காரசார விவாதங்களுக்கு இடையே  மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் பதிவாகின. இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதா குறித்து விளக்கமளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதா குறித்து இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒருவர் கூட அச்சப்பட வேண்டாம். யார் பயமுறுத்தினாலும் நீங்கள் பயப்படாதீர்கள். இங்குள்ள ஒரு முஸ்லிம் கூட  வெளியேற்றப்பட மாட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து வகையிலும் அரசியல் சாசனப்படி சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை வழங்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று மாநிலங்களவையில்  தெரிவித்தார். இருப்பினும் எதிர்க்கட்சியினர் அதனை ஏற்ப மறுத்துவிட்டன. மசோதாவிற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களித்தனர். மக்களவையில் ஆதரவு அளித்த சிவசேனா கட்சி, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு  செய்தனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்படுகிறது. மனு தாக்கல் செய்யப்படுவரை பொறுத்து மனு தள்ளுபடி செய்யப்படுமா?  இல்லை விசாரணைக்கு எடுக்கப்படுமா? என்பது தெரியவரும். இருப்பினும், உச்சநீதிமன்றம் மனு குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தீவிர காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian Union Muslim League ,Supreme Court ,Bill ,Supreme Court of India , Indian Muslim League writes petition in Supreme Court against Citizenship Bill
× RELATED அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி...