×

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டம்: அசாம் முதல்வரின் இல்லம் மீது கல் வீசியதால் பெரும் பரபரப்பு

அசாம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அசாம் முதல்வரின் இல்லம் மீது கல் வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு  மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்த வகையில், அசாமில் நேற்று பந்த் அறிவிப்புகள் ஏதும் இல்லாத நிலையிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்தன.

திப்ரூகரில் பொதுமக்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், துப்பாக்கியால் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கூட்டத்தை கலைத்தனர். ஜோர்ஹட், கோலாகட், தின்சுகியா, சிவசாகர், நாகோன், போன்கய்கான், சோனிட்பூர் போன்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலைகளில் டயர்கள் கொளுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்துள்ளது. ரயில் மறியல் காரணமாக, 14க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற போராட்டத்தின் போது திப்ருகர் லக்கிநகர் பகுதியில் உள்ள அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதனால் திப்ருகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் மையப்பகுதியான கவுகாத்தியிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Citizenship Amendment Bill: Massive commotion ,Anti-CAB ,residence ,Assam CM ,CM Sonowal ,Assam , Citizenship Amendment Bill, protest, Assam, CM, stone-pelted
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...