மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சி அதிகரிப்பு: மாநிலம் முழுவதும் பல தலைவர்களின் சிலைகளை நிறுவ திரிணாமூல் காங்கிரஸ் திட்டம்

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்கும் வகையில், மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் சிலைகளை நிறுவும் முயற்சியில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத்  தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் கங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பாஜக தற்போது 18 எம்.பிக்களை கைப்பற்றி விட்டது. அதனைவிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சமமாக வாக்கு சதவீதத்தையும்  பிடித்துவிட்டது. இது, திரிணாமூல் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. இதனால், முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல், அதற்கடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியில், திரிணமுல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது: ஹிந்துத்துவா கொள்கையின் மூலம், மாநிலத்தில் பா.ஜ., வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை சமாளிக்கும் வகையில், மாநிலத்தின் பெருமையை, மதச்சார்பின்மையை மக்களிடம்  கொண்டு செல்ல உள்ளோம். இதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த பல தலைவர்களின் சிலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம் என்றார்.

சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோரின் சிலைகளை ஆங்காங்கே நிறுவ உள்ளோம். தற்போது கொல்கத்தாவில், 30 சிலைகள் நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரு  சிலையை அமைக்க, 20 - 30 லட்சம் ரூபாய் செலவாகிறது. கட்சியினர் நிதி திரட்டி, சிலைகளை நிறுவி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இடைத்தேர்தலில் பாஜக தோல்வி:

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள கரீம்பூர், காரக்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.க்களாக ஆனதால் இந்த தொகுதிகள்  காலியானது. அதே போல, அம்மாநிலத்தில் உள்ள கலியகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பர்மாநாத் ராய் காலமானதால் இந்த தொகுதியும் காலியானது. இந்த தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமூல்  காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: