×

வாணியம்பாடி அருகே சாலை வசதியில்லாததால் தொழிலாளி சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமம் சுமார் 1,200 அடி உயரம் கொண்டது. இந்த மலைமீது 150 குடும்பங்கள் கொண்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக்கிராமத்திற்கு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி செய்யப்படவில்லை. அதேபோல் மருத்துவம், மின்சாரம் என்று எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் கண்டிராத நிலையில் உள்ளனர். இங்கு 5ம் வகுப்பு வரை மட்டும் ஒரு பள்ளி உள்ளது. அதிலும் 3 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் வருவாராம். இப்படி அடிப்படை வசதிகள், இல்லாததால் இந்த மலைக்கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு யாரும் பெண் தருவதில்லையாம். இதனால் அங்குள்ள வாலிபர்களும் சென்னை, பெங்களூரு என்று வேலை தேடி சென்றுவிடுகிறார்கள். இப்படி வஞ்சிக்கப்பட்டுவரும் மலைக்கிராம மக்கள் தினமும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நெக்னாமலையைச் சேர்ந்த சேட்டு என்பவரது மகன் முனுசாமி என்கிற ரஜினி(27), மனைவி அனிதா மற்றும் குழந்தைகளுடன் தங்கி, கோவையில் சென்டரிங் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் கோவையில் கட்டிடத்திற்கான சென்டரிங் பிரிக்கும்போது, திடீரென மின்சாரம் தாக்கி ரஜினி இறந்துள்ளார். அவரது சடலத்தை சொந்த ஊரான நெக்னாமலைக்கு அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். நெக்னாமலைக்கு சாலைவசதி இல்லாததால், ரஜினியின் சடலத்தை டோலி கட்டி மலைமீது கொண்டு சென்றனர். அதோடு கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி அனிதா மலைமீது நடக்க முடியாத நிலையில் மயங்கி விழுந்ததால், அவரையும் மற்றொரு டோலி கட்டி மலைக்கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

Tags : Dolly ,Vaniyambadi ,body toli , Vaniyambadi, roadblock, pity , worker's body, the toli
× RELATED இரவின் கண்கள் விமர்சனம்