திருச்சுழி அருகே ஊராட்சி தலைவர் பதவி 21 லட்சத்துக்கு ஏலம்?: வெற்றிபெற்றதும் கறி விருந்துக்கு 5 லட்சம்

திருச்சுழி: திருச்சுழி அருகே ஊராட்சி தலைவர் பதவிக்கு 21 லட்சம், வெற்றி பெற்றதும் 5 லட்சத்தில் கறி விருந்து என ஏலம் நடந்ததாக வந்த தகவலால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்தில் டிச. 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த 2 தினங்களாக ம.ரெட்டியபட்டியில் உள்ள திருச்சுழி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. தும்முசின்னம்பட்டி ஊராட்சியில் தும்முசின்னம்பட்டி, சேதுபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இங்கு மொத்தம் 1,907 ஓட்டுகள் உள்ளன. இரண்டு கிராமங்களும் 6 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 6 சமுதாயத்தினர் குடியிருந்து வருகின்றனர். இங்கு ஒருதரப்பைச் சேர்ந்த நபரை, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நிறுத்த தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மற்றொரு தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனே அதிருப்தி அடைந்த தரப்பினர், சில தினங்கள் முன்பு ஊருக்குள், ஊராட்சி தலைவர் பதவி குறித்து கூட்டம் போட்டுள்ளனர். அப்போது அத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் போட்டியிட விரும்பியதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் கூட்டத்தில் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுவதாக முடிவு செய்தனராம்.

இதைத்தொடர்ந்து ஒரு தொகை முடிவு செய்ததாகவும், நான்கு பேரும் அந்த தொகையை கொடுக்க சம்மதித்ததால், அவர்களது பெயரை எழுதி குலுக்கல் நடத்தி ஒருவரை தேர்தலில் நிறுத்த தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. இவர், தனது சமுதாய நிதியாக 21 லட்சம் செலுத்த வேண்டும். வெற்றி பெறும்பட்சத்தில் 5 லட்சத்தில் கிடாக்கறி விருந்து அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், பணம் திரும்ப தரப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா 10 ஆயிரம் கொடுக்க வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் திரும்பப் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி ஊராட்சி தலைவர் பதவி லட்சக்கணக்கில் ஏலம் போனதாக வந்த தகவலால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: