நிலங்களில் விவசாயப்பணிகள் துவக்கம்: கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுக்கு சிக்கல்?: தொல்லியல் துறை விளக்கமளிக்க வலியுறுத்தல்

திருப்புவனம்: கீழடி அகழாய்வு நடந்த இடத்தில் விவசாய பணிகள் துவங்கியுள்ளன. இதனால் ஜனவரியில் துவங்கவுள்ள ஆறாம் கட்ட அகழாய்வுக்கு சிக்கல் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால், தொல்லியல் துறை விளக்கமளிக்க தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த ஜூன் 13ல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 5ம் கட்ட அகழாய்வு துவங்கி அக்டோபர் 3ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் முருகேசன், மாரியம்மாள், நீதியம்மாள், போதகுரு, கருப்பையா ஆகியோரது 8.50 ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகளை நடந்தன. மொத்தம் 52 குழிகள் தோண்டப்பட்டு, 900க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டன. பழங்கால பானை,  தொட்டி வடிவிலான சுடுமண் செங்கல் கட்டுமானம், தண்ணீர் செல்லும் குழாய், கால்வாய், இரண்டு நீண்ட சுவர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.

இதில் முருகேசன் நிலத்தை தவிர மற்ற நிலங்கள் தோப்புகள் என்பதால், தென்னை மரங்களுக்கு நடுவே அகழாய்வு பணிகள் நடந்தன. ஆனால் முருகேசனின் நான்கரை ஏக்கர் நிலங்கள் தரிசாக இருந்தன. அகழாய்வு பணிகள் முடிந்த பின் அவர் தனது நிலங்களில் விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். முருகேசன் நிலத்தில்தான் தண்ணீர் தொட்டி, இரண்டு நீண்ட சுவர், இரண்டு உறைகிணறுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. உறைகிணறு உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். தண்ணீர் தொட்டி, கால்வாய் போன்ற அமைப்பை அப்படியே மீண்டும் மூடி விட்டனர். தற்போது முருகேசன் அவரது நிலத்தில் உளுந்து, நிலக்கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளார். தொடர்ச்சியாக மழை பெய்தால் இவை இன்னும் இரு மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். இதுகுறித்து முருகேசனின் தாயார் முத்துலட்சுமி கூறுகையில், ‘‘அகழாய்வு பணிகள் முடிந்தாலும் இன்னும் ஆட்கள் தொடர்ந்து வருவதால் உள்ளே யாரும் போக முடியாதபடி பூட்டு போட்டு வைத்துள்ளோம்’’ என்றார்.ஜனவரி கடைசியில் துவங்க உள்ள ஆறாம் கட்ட அகழாய்விற்கு மீண்டும் தமிழக தொல்லியல் துறை நிலத்தை கேட்க வாய்ப்புள்ளது. அப்போது, விவசாயம் நடைபெறுவதால், நிலத்தை தொல்லியல் ஆய்வுக்கு எடுக்கமுடியாமல் போகும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதற்கு தொல்லியல் துறை விளக்கமளிக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: