எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரை

புதுடெல்லி: மக்களின்  தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்கும்,  `தனிநபர் தகவல் பாதுகாப்பு  மசோதா’வை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு  அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை பாதுகாப்பதற்கான, ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’ைவ மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மசோவை எதிர்த்து காங்கிரஸ் மக்களவை கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், மோகா மொய்த்ரா உள்ளிட்டோர் பேசினர். அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘வேவு பார்க்கும் அமைப்புகள் அதிகரித்து விட்டதுடன், அரசியலைமைப்பு சட்டத்தையும் இந்த மசோதா மீறுகிறது.

மசோதாவை சசிதரூர்   தலைமையிலான தகவல் மற்றும் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு  அனுப்ப வேண்டும்,’’ என்றார். சவுகதா ராய் பேசுகையில், ‘‘மக்களின் தனி உரிமை மீறப்படுகிறது. இஸ்ரேலின் ‘பெகாசஸ்’ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு நபர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன,’’ என்றார். இதைத் தொடர்ந்து, இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. பின்னர், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ‘‘இந்த மசோதாவை  நாடாளுமன்ற  இரு அவைகளின் கூட்டு தேர்வுக் குழுவுக்கு  பரிந்துரை  செய்கிறேன். இந்த  குழு தனது அறிக்கையை வரும் ஜனவரி கடைசியில்  தொடங்கும்  பட்ஜெட்  கூட்டத் தொடருக்கு முன்பாக சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் உரிமைகள், ரகசியத்தை இந்த மசோதா பாதுகாக்கும். நீதிபதி கிருஷ்ணா குழுவின் விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த மசோதா தயார் செய்யப்பட்டது. தனியுரிமை என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமையை தீவிரவாதிகளும் ஊழல்வாதிகளும் தவறாக பயன்படுத்துகிறார்கள்,’’ என்றார்.

Related Stories:

>