தென்மாநிலங்களில் பாசனத்தை மேம்படுத்த கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகளை இணைக்க திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

பெங்களூரு: ‘‘தென்மாநிலங்களில் விவசாயிகள், பொதுமக்களுக்கு சீரான தண்ணீர் வசதி  ஏற்படுத்துவதற்காக கோதாவரி, காவிரி மற்றும் கிருஷ்ணா  நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது,’’ என மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். கர்நாடகாவில்  இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய தேசிய நெடுஞ்சாலை மற்றும்  நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி  மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்து வரும், ‘எக்ஸ்கான்-2019’  மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: நாட்டில்  தற்போது பெட்ேரால் உள்ளிட்ட எரிபொருள் பயன்படுத்துவதின் மூலம்  சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டுமானால்  சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிபொருளை (எல்என்ஜி) பயன்படுத்த முன்னுரிமை  கொடுக்க வேண்டியது அவசியம். அதை செயல்படுத்தும் வகையில் தேசியளவில்  பெட்ரோல், டீசல் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களுக்கு தடை விதித்து  வருவதுடன் அதற்கு மாற்றாக சிஎன்ஜி, எல்என்ஜி எரிபொருள் பயன்படுத்த  முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. எல்என்ஜி எரிபொருள் நாட்டின்  எதிர்காலத்தில் முக்கிய எரிபொருளாக கருதப்படுகிறது. இதை பயன்படுத்துவதின்  மூலம் 50 சதவீதம் நிதி மிச்சப்படுத்தப்படும்.

இன்றைய கால கட்டத்தில் நீர்  மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மழை நீர்  சேமிப்பு வசதியை வீடுகளில் தொடங்கினால் மட்டும் போதாது. வீணாக கடலில்  கலக்கும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இதை செயல்படுத்த வேண்டுமானால் நதிகள்  இணைப்பு திட்டம் அவசியம். அதை கருத்தில் கொண்டு தென்மாநில நீர்மேலாண்மை  திட்டத்தை செயல்படுத்த வசதியாக, கோதாவரி, காவிரி மற்றும் கிருஷ்ணா ஆகிய  மூன்று நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. இதன் மூலம், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களில்  முழுமையாக நீர்ப்பாசன வசதிகள் கிடைக்கும். விவசாயிகளில் எதிர்காலம்  மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் 2000 பயோ எரிபொருள் பங்க்

நிதின் கட்கரி மேலும் பேசுகையில், ‘‘நாட்டில் உள்ள தேசிய  நெடுஞ்சாலைகளில் புதியதாக 2 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் தொடங்கப்படும்.  எதிர்காலத்தில் புதியதாக தொடங்கப்படும் பெட்ரோல் பங்குகள் முழுக்க, முழுக்க  பயோ எரிபொருள் பங்குகளாக மாற்றம் செய்யப்படும். மேலும், வரும் 5  ஆண்டுகளில் நாட்டில் ₹100 லட்சம் கோடி மதிப்பில் அடிப்படை வசதிகள்  உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கும் திட்டம்  செயல்படுத்தப்படும். மேலும், இத்தாலி நாட்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  வாகன நிறுத்த கட்டிடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம், தொழில் வளர்ச்சிக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories:

>