ஐதராபாத் என்கவுன்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதியை நியமிக்க பரிசீலனை: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: ஐதராபாத் என்கவுன்டர் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் டாக்டர் டிஷாவை கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். நாடு முழுவதும் இந்த என்கவுன்டருக்கு வரவேற்பும், எதிர்ப்புகளும் குவிந்தன. இதற்கிடையே, இது போலியான என்கவுன்டர் என்றும், என்கவுன்டர் நடத்திய போலீசார் மீது எப்ஐஆர் பதிவு செய்து தனி விசாரணை குழு அமைத்து விசாரிக்க கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவத்தை ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் நசீர், சஞ்சீவ் கண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தெலங்கானா அரசு தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ‘‘என்கவுன்டர் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்கீழ் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இந்த வழக்கு சிபிசிஐடி.க்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,’’ என்றார். இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த விவகாரத்தில் உள்ள உண்மைகளை தெலங்கானா உயர் நீதிமன்றம் ஆய்வு செய்யும். அதே சமயம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் தனியாக விசாரணை நடத்தவும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். நியமிக்கப்படும் முன்னாள் நீதிபதி, டெல்லியில் இருந்தபடி விசாரணை மேற்கொள்வார்,’’ என்றார். விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட் டது. இன்றைய விசாரணை யின்போத முன்னாள் நீதிபதியின் பெயர் அறிவிக்கப்படும்.

Related Stories: