×

பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனையளிக்க சட்ட மசோதா: ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருமலை: பெண்கள், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால், 21 நாட்களில் விசாரணை நடத்தி தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும்  சட்ட மசோதா நிறைவேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம், செம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிஷாவை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்த வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன், இனி இதுபோன்று குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கும், தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் அனைவர் மத்தியிலும் வரவேண்டும் என்பதற்காக பெண்களின் பாதுகாப்புக்காக தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, குண்டூர் மாவட்டம், வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆந்திர மாநில கிரிமினல் சட்டம்  - 2019 (டிஷா  சட்டம்)  கொண்டு வந்து, வரலாற்றுச் சரித்திரம் மிக்க சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதில்  பெண்கள், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட உள்ளது. 14 நாட்களில் விசாரணை செய்து 21 நாட்களில் தண்டனை வழங்கும் விதமாக சட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளது. இந்த நீதிமன்றத்தில் பாலியல் பலாத்காரம்,  பாலியல் வன்கொடுமை, ஆசிட் தாக்குதல்,   சமூக வலைத்தளத்தின் மூலமாக பெண்களை இழிவுபடுத்தும் பதிவு  உள்ளிட்ட பெண்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்ட உள்ளது.

சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கு எதிராக பதிவு செய்வது பெண்கள் குறித்து இழிவாக பதிவு செய்வது இந்த சட்டத்தில் உட்படுத்தப்பட உள்ளது. இ-மெயில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக தவறான தகவல்களை பதிவு செய்தால் முதல் முறை தவறு செய்தால் 2 ஆண்டுகள், இரண்டாவது முறை தவறு செய்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் விதமாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக (  354 எப் ) பிரிவு கீழ் தண்டனை வழங்கும் விதமாக சட்டத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீது வன்கொடுமையில் ஈடுபட்டால் 10 ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் குற்ற செயலின் தீவிரத்தை பொறுத்து ஆயுள் தண்டனை வரை வழங்கவும்,  போக்சோ சட்டத்தில் இதுவரை மூன்று ஆண்டுகள் இருந்த சிறை தண்டனையை 5 ஆண்டுகளாக உயர்த்த முடிவு உள்ளிட்ட சிறப்பு மசோதா அமைப்பதற்கு ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை தீர்மானத்தை வைத்து  சட்டப்பேரவையில் விவாதத்திற்கு பிறகு புதிய சட்ட மசோதா நடைமுறைக்கு  கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : cabinet meeting ,Andhra ,Women ,children ,execution ,hearing , Women, children, rape case, hearing, execution, Andhra cabinet meeting
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்