×

சென்னை ரயில் நிலையங்களில் கழிவறையின்றி மக்கள் அவதி: பிரதமர் மோடிக்கு எதிராக செயல்படுகிறது ரயில்வே: தயாநிதி மாறன் எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் எதிலும் அடிப்படை வசதியான கழிவறை வசதி செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும், தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிராகவும் ரயில்வே அமைச்சகம் செயல்படுகிறது,’’ என மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி குற்றம்சாட்டினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில், சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் கழிவறை வசதி தொடர்பாக திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:
சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும், திருவொற்றியூரில் இருந்து சென்னை வரையிலும் உள்ள புறநகர் ரயில் நிலையங்களில் எங்குமே அடிப்படை வசதியான கழிவறை வசதி செய்யப்படவில்லை. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் ஏராளமான பயணிகள், குறிப்பாக பெண்கள், முதியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கழிவறை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

நாடு முழுவதும் தூய்மையை வலியுறுத்தி பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இதற்காக தூய்மை இந்தியா திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே அமைச்சகமோ கழிவறை வசதி செய்து தராமல், பிரதமர் மோடி, தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. புறநகர் ரயில் நிலையங்களில் அடிப்படை கழிவறை வசதி செய்து தராமல் இருப்பதற்கான காரணம் என்ன? இது தொடர்பாக பலமுறை ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.நாடு முழுவதும் எத்தனை ரயில் நிலையங்களில் கழிவறை வசதி உள்ளது? அனைத்து ரயில் நிலையத்திலும் கழிவறை வசதி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளதா? அப்படியெனில் எப்போது கழிவறைகள் கட்டி முடிக்கப்படும்? இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Dayanidhi Maran ,Railway ,Modi ,Modi Chennai ,Railway Stations , Chennai, Railway Stations, Toilets, People Awadi, Dayanidhi Maran MB
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...