குடியுரிமை திருத்த மசோதா பற்றி நமது நாட்டு எதிர்க்கட்சிகள் பாக்.கை போல் பேசுகின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பற்றி நமது நாட்டு எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானைப் போல பேசுகின்றன,’’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் பாஜ எம்பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: குடியுரிமை சட்டத் திருத்தம், இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. மதரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்தவர்களுக்கு இந்த சட்டம் நிரந்தரமான பாதுகாப்பை அளிக்கும். இந்த சட்ட திருத்தத்தை பற்றி நமது நாட்டு எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானைப் போல பேசுகின்றன.

எனவே, இந்த குடியுரிமை மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல், அந்த சட்டம் பற்றிய கட்டுக்கதைகளை பாஜ எம்பிக்கள் தகர்க்க வேண்டும்.

சட்ட திருத்தத்தின் நன்மைகளைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  வரவிருக்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தும் வகையில், அனைத்து பாஜ எம்பி.க்களும் தொழில் துறையினர், விவசாயிகள், வர்த்தகர்கள், ஏழைகள் என சமூகத்தில் எல்லா தரப்பு மக்களின் கருத்தையும் கேட்டறிந்து நிதி அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த பாஜ நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘சட்டப்பிரிவு 370 நீக்கத்தைப் போல, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் பாஜ அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவு என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த மசோதா மாநிலங்களவையிலும் 100 சதவீதம் நிறைவேறும்,’’ என்றார்.

Related Stories: