இலங்கை தமிழர்களை ஏற்க மறுப்பது ஏன்?

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியதாவது: இந்துத்துவாவை முன்னெடுப்பதற்காக இந்த மசோதாவை பாஜ கொண்டு வந்துள்ளது. இது சோகமான நாள். நிச்சயம் இந்த மசோதா நீதிமன்றத்தால் சட்ட விரோதம் என அறிவிக்கப்படும். இந்த மசோதா நாடாளுமன்றத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம். இந்த மசோதாவை தாக்கல் செய்வதோ, நிறைவேற்றுவதோ அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை கொண்டு வந்திருக்கவே கூடாது. இம்மசோதாவை கொண்டு வருவதற்கு முன்பாக அரசு, அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்டதா? அவரை அவைக்கு அழைத்து வந்து விளக்கம் தரச் சொல்லுங்கள்.

அதற்கு அரசுக்கு தைரியம் உள்ளதா? எதற்காக குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டும் சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டன என்பதற்கான காரணத்தை அரசு கூறுமா? இந்த மசோதாவில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இலங்கை, பூடான் நாடுகள் சேர்க்கப்படாதது ஏன்? இலங்கை இந்துக்களும், பூடான் கிறிஸ்தவர்களும் புறக்கணிக்கப்படுவது ஏன்? மத ரீதியாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என இந்த மசோதாவில் அறிவிக்கப்பட்டது ஏன்? இந்த மசோதாவை இங்கு தடுத்து நிறுத்த முடியாது. இனி நாட்டை நீதிமன்றங்கள்தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

3 நாடுகள் மட்டும் ஏன்? திமுக எம்பி சிவா கேள்வி

திமுக எம்பி திருச்சி சிவா பேசுகையில், ‘‘பாகிஸ்தானில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களும் மத ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லையா? இந்த மசோதாவில் எதற்காக 3 நாடுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன? அப்படியெனில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் கதி என்னவாகும்? ஜின்னா அழைப்பின் பேரில் பல முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கி உள்ளனர். அவர்களின் தேசப்பற்றுக்கு மதிப்பளிக்க வேண்டாமா? 30 ஆண்டாக இலங்கை தமிழர்கள் அகதிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்,’’ என்றார்.

‘வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்’

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது: யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தியடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும். மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மையற்ற, குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். அகதிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆதரவளித்த அதிமுக

மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்பி எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், ‘‘குடியுரிமை திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது. இம்மசோதாவில் ஈழத் தமிழரை சேர்க்காதது வருத்தம் தருகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வருகை தரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும்,’’ என்றார். இதேபோல் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த் பேசுகையில், ‘‘ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இம்மசோதாவை அதிமுக ஆதரிக்கும்,’’ என்றார். ஏற்கனவே, மக்களவையில் குடியுரிமை மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்தரநாத் குமார் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

பிறப்பில் இருந்து மதத்திற்கு வந்தது

இந்திய அரசில் சாசனம் அமல்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, 1955ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பிறப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்குவதாக முதலில் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 1986, 2003, 2005, 2015ல் திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போது, முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்ப்பதற்கு இதுவே காரணம்.

Related Stories: