×

மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பையும் மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது : ஆதரவு 125; எதிர்ப்பு -105

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் நேற்று எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிர்த்து 105 வாக்குகளும் பதிவாகின. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜ கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து பேசியதாவது: பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவீதம் குறைந்துள்ளது. அவர்கள் ஒன்று கொல்லப்பட்டுள்ளனர் அல்லது அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அங்கு, சிறுபான்மையினர்களுக்கு எந்த உரிமையும் தரப்படுவதில்லை. இந்த சட்ட திருத்தத்தையும், இந்திய முஸ்லிம்களையும் சம்பந்தப்படுத்தி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

இந்த மசோதா குறித்து இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒருவர் கூட அச்சப்பட வேண்டாம். யார் பயமுறுத்தினாலும் நீங்கள் பயப்படாதீர்கள். இங்குள்ள ஒரு முஸ்லிம் கூட வெளியேற்றப்பட மாட்டார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து வகையிலும் அரசியல் சாசனப்படி சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை வழங்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த மசோதாவை திடீரென தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளோம். இந்த சட்ட திருத்தத்தின்படி, 2014ம் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதா, வடகிழக்கு மாநிலங்களில் இந்திய குடிமக்கள் பயணிப்பதற்கான அனுமதி (ஐஎல்பி) பெற வேண்டிய பகுதிகளில் செல்லாது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டி, பல்வேறு கேள்விகளை எழுப்பின. அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட பாஜ கூட்டணியில் இல்லாத சில மாநில கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து அமித்ஷா இறுதியில் பேசியதாவது: இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது நேரு-லியாகத் அலிகான் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், தங்களின் நாடுகளில் சிறுபான்மையினர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்தனர். ஆனால், அந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மரியாதை தரவில்லை. இந்தியாவைப் போல் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. 3 அண்டை நாடுகளும் சிறுபான்மை மக்களை விரட்டி அடித்தன. அவர்கள் வேறுவழியின்றி இந்தியாவில் அகதிகளாக உதவி கோரினர். இதன் காரணமாகவே 3 நாடுகள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த 3 அண்டை நாட்டிலும் மத ரீதியாக பாதிக்கப்படும் முஸ்லிம்கள் எண்ணிக்கை குறைவுதான். அவர்கள் கூட சட்டப்படி இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும். இதுவரை 560 முஸ்லிம்களுக்கு குடியுரிமை தரப்பட்டுள்ளது. அந்த 3 நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. ஏன் தெரியுமா? காங்கிரசால் அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாக இருக்கிறார்கள். இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அந்த புள்ளி விவரங்களை நாங்கள் தாக்கல் செய்கிறோம்.

காங்கிரஸ் எம்பி.க்கள் எது பேசினாலும், அது அப்படியே பாகிஸ்தான் பிரதமர் இம்ரானின் குரலாக எதிரொலிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் என 2 மதத்தினர் மட்டுமே பலன் அடைந்தனர். அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லை. காங்கிரஸ் செய்தால் அது மதச்சார்பின்மை. இன்னும் எத்தனை நாள் மக்களை முட்டாளாக்குவீர்கள்? நாங்கள் 6 மதத்தினரை சேர்த்துள்ளோம். குடியுரிமை சட்டத் திருத்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. சட்டப்பிரிவு 370, முத்தலாக் என எல்லாவற்றுக்குமே மதத்தை இழுப்பதா? ஏன் காஷ்மீரில் இந்துக்கள் இல்லையா? பவுத்தர்கள் இல்லையா? இந்த மசோதா எந்த இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை மீதும் கை வைக்காது. நாங்கள் முஸ்லிம்களை பயமுறுத்த வேண்டுமென விரும்பவில்லை. அதேசமயம், அவர்களிடம் பயத்தை தூண்டவும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதைத் தொடர்ந்து மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 124 ஓட்டுகள் எதிராகவும், 99 ஓட்டுகள் ஆதரவாகவும் பதிவாகின. இதனால், தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது நிராகரிக்கப்பட்டது. பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 43 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் பதிவாகின. சிவசேனா கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டது. இது, பாஜ.வுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

‘வரலாற்றில் கருப்பு நாள்’

காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இது கருப்பு நாள். குறுகிய மனப்பான்மை கொண்டவர்களுக்கும்,  சகிப்புத்தன்மையற்றவர்களுக்கும் கிடைத்த வெற்றி’’ என கூறியுள்ளார்.

‘வரலாற்றில் மகத்தான நாள்’
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘மசோதா நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரலாற்றில் இந்தியாவுக்கும் தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்துக்கும் மகத்தான நாள்’’ என்று  கூறியுள்ளார்.

8 மணி நேர காரசாரம்

* மசோதா மீது பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி 8 மணி நேரம் விவாதம் நடந்தது.
* இரவு 8 மணிக்கு வாக்கெடுப்பு நடந்தது.
* அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த 44 எம்.பி.க்கள் விவாதத்தில் பங்கேற்று  பேசினர்.

சிவசேனா புறக்கணிப்பு

மாநிலங்களவையில் குடியுரிமை மசோதா மீதான வாக்கெடுப்பை சிவசேனா நேற்று புறக்கணித்தது. வாக்கெடுப்பில் அக்கட்சியின் 3 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிராவில் பாஜ உடனான உறவு முறிந்த நிலையில், கடந்த 9ம் தேதி மக்களவையில் அக்கட்சி குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. ஆனால், மாநிலங்களவையில் மட்டும் பின்வாங்கியது. அதேபோல், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்ெகடுப்பில் பங்கேற்கவில்லை.

Tags : Rajya Sabha , Citizenship Amendment Bill was passed ,despite strong ,opposition in the Rajya Sabha
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...