காஞ்சிபுரத்தில் பரபரப்பு மெத்தை கடையில் பயங்கர தீ விபத்து : புகை மண்டலத்தில் மூழ்கிய குடியிருப்புகள்

சென்னை: சென்னை காஞ்சிபுரத்தில் 3 மாடி கொண்ட மெத்தை கடையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் சங்குசாபேட்டையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (52). அதே பகுதியில் தலையணை, கார்ஷீட், மெத்தை, மேட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். 3 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் குடோன் உள்ளது. இந்த கடையில் 6 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ராதாகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மேல் மாடியில் இருந்து குபுகுபுவென புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே 3 மாடியிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, நேற்று அதிகாலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள், கட்டிடமும் சேதம் அடைந்தது. அதில் இருந்த 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறுப்படுகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், சுற்றியுள்ள வீடுகளில் புகை மண்டலம் பரவியதால், அங்குள்ள மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனால் பலர் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் இந்த சம்பவம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கறை படிந்த வீடுகள்

தீ விபத்து ஏற்பட்ட மெத்தை கடையை சுற்றியுள்ள வீடுகளில் கரும்புகை சூழ்ந்தது. மேலும், மின்தடையால் பொதுமக்கள் பலர் வீட்டில் இருந்து வெளியேறினர். நேற்று அதிகாலையில் தீயை அணைத்த பின்னர் தான் அனைவரும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் மற்றும் சுவர்களில் கரும்புகை படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை தண்ணீருடன் கெமிக்கல் கலந்து கழுவினர். ஆனால், சுண்ணாம்பு அடிக்கப்பட்ட சுவர்களில் கரும்புகை படிந்து காணப்பட்டது.

Related Stories: