உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக 5 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ கைது

தண்டையார்பேட்டை: காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் 5 லட்சம் பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஓய்வுப்பெற்ற எஸ்.ஐயை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் கார்த்திக் (30). கடந்த 2015ம் ஆண்டு சென்னை மண்ணடியை  சேர்ந்த இளம்தமிழன் என்பவர் மூலம் மணலி காவல் நிலைய உதவி ஆய்வாளரான குடியாத்தம் பகுதியை சேர்ந்த மோகன் (62)  அறிமுகமாகி உள்ளார். அப்போது மோகன் 4 லட்சம்  கொடுத்தால் காவல் துறையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கார்த்திக்கிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திக் 4 லட்சம் பணத்தை மோகனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மோகன் வேலை வாங்கித்தராமல் காலம் கடத்தி வந்ததால் கார்த்திக் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதில் ₹3 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு மீதி பணத்தை தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு எஸ்.ஐ மோகன் மீண்டும் கார்த்திக்கை தொடர்பு கொண்டு, ‘‘இந்த முறை உதவி ஆய்வாளர் வேலை கண்டிப்பாக வாங்கி தர முடியும்’’ எனக்கூறி 4 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அப்போதும் வேலை வாங்கி தராமல் மோகன் அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த கார்த்திக் நேற்று வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் மோகன் மீது புகாரளித்தார். புகாரின்பேரில், ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து மோகனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் உதவி ஆய்வாளர் வேலை வாங்கி தருவதாக கூறி மோகன் 5 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. எனவே, மோகன் மீது  போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், ஜார்ஜ் டவுன்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: