செம்பியம் தனியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுகம் : கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: செம்பியத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நேற்று முன்தினம் காவலன் எஸ்ஓஎஸ் செயலி மாணவிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில், கூடுதல் கமிஷனர் தினகரன் பங்கேற்று விளக்கினார். தமிழகத்தில் சிறுமிகள், இளம்பெண்கள் மற்றும் வயதான பெண்களின் பாதுகாப்புக்காக காவலன் எஸ்ஓஎஸ் செயலி ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கி உள்ளது. இந்த செயலியை பொதுமக்கள், கல்லூரி மற்றும் இளம்பெண்களிடம் செயலி நடைமுறை குறித்து விளக்கும்படி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை நகரில் பள்ளி, கல்லூரிகளில் சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு காவல் சரகத்துக்கு உட்பட்ட செம்பியம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நேற்று முன்தினம் ‘காவலர்களுடன் கைகோர்ப்போம்’ ‘புதிய சமுதாயம் படைப்போம்’ என்ற தலைப்பில் காவலன் எஸ்ஓஎஸ் செயலி அறிமுக விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமை தாங்கினார். இதில் அந்த கல்லூரியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது செல்போனில் காவலன் செயலியை தரவிறக்கம் செய்து நடைமுறை சந்தேகங்கள் குறித்து கூடுதல் கமிஷனர் தினகரனிடம் கேட்டறிந்தனர்.

இதில் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர்கள் ஜெய்சிங், முத்துக்குமார், செம்பியம் இன்ஸ்பெக்டர் ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, இந்த காவலன் செயலியின் உபயோகம் குறித்து தங்களுக்கு தெரிந்த சிறுமிகள் மற்றும் வயதான பெண்களுக்கு விளக்குவோம் என கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

Tags : Commissioner ,Sembiyam ,Dinakaran ,Police Processor ,Sembium Private Ladies College , Introducing the Police Processor,Sembium Private Ladies College
× RELATED வித்யாமந்திர் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்