சாலையோரம் தூங்கிய சிறுமிக்கு தொல்லை கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை : போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலையில் படுத்திருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த காம கொடூரனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் முரளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தனது மனைவி, 2 மகன் மற்றும் 2 மகள்களுடன் சாலையோரத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவரது 7 வயது இளைய மகள் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வழக்கம் போல் சிறுமி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மீன்பாடி வண்டியில் உறங்க சென்றார். பின்னர் அப்பா முரளி கடையை மூடிவிட்டு உறங்க சென்றார்.

அப்போது மகள் படுத்திருந்த மீன்பாடி வண்டியில் அசைவு தெரிந்ததால் பதற்றமடைந்த முரளி அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே மீன்பாடி வண்டி ஓட்டி வேலை செய்து வரும் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) என்பவர் முரளியின் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. முரளியை பார்த்ததும் அர்ஜூனன் தப்பி ஓடியுள்ளான். இதனால் பதற்றமடைந்த முரளி, துறைமுகம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அர்ஜுனனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அர்ஜூனன் குற்றம் செய்துள்ளது, நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ₹2500 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

Tags : jail ,road , Woman sleeping , side of a road
× RELATED 9 வயது மாணவி பலாத்காரம் பள்ளி...