பரந்தூர் புதிய சர்வதேச விமான நிலையத்துக்கு நிலங்களை வழங்க மறுத்து பெண்கள் தெருவில் தஞ்சம் : மாற்று இடம் தேர்வு செய்ய கோரிக்கை

சென்னை: சென்னை திரிசூலத்தில் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலையம் நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இதனால் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள  பொன்னேரிக்கரையில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள பரந்தூர் கிராமத்தில் புதிய விமான நிலைய அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் 4700 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத இடம் தமிழ்நாடு அரசின் கைவசத்தில் உள்ளது. மிஞ்சிய 50 சதவீத இடம் கிராம மக்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டியுள்ளது. இந்த நிலத்தை கைப்பற்றுவது அரசுக்கு சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. புதிய விமான நிலையத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு அதிகாரிகள், ஓரிரு வாரங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நாங்கள் பல தலைமுறையாக இங்கு விவசாயம் செய்து வருகிறோம். எனவே விமான நிலையத்துக்கு  நிலத்தை கொடுக்க சிறிதளவும் எண்ணம் இல்லை. ஒருவேளை அரசு, விவசாய நிலத்தை கையகப்படுத்தி மாற்று இடத்தில் வீடு கொடுத்தாலும், நாங்கள் செல்ல மாட்டோம். வாழ்ந்தாலும், இறந்தாலும் இந்த பரந்தூர் கிராமமே எங்களுக்கு வேண்டும். விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’’ என்றனர். இதற்கிடையே தமிழக அதிகாரிகள் புதிய விமான நிலையம் அமைக்க செங்கல்பட்டு அருகே மாமண்டூர், காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஆகிய 2 இடங்களை தேர்வு செய்து, இந்திய விமான நிலைய கட்டுப்பட்டு துறைக்கு அனுப்பி உள்ளதாகவும், இதில் பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம் வெடிக்கும் அபாயம்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சென்னை-சேலம் 8 வழிச்சலைக்காக விளைநிலங்கள், வீடுகள் அகற்றப்பட்டன. நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தி, அதற்கான கற்களை நட்டு வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் நடந்தது. அதேபோல் தற்போது விமான நிலையம் அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் மீண்டும் மக்களின் போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: