×

தமிழகம் 307 ரன் குவித்து ஆல் அவுட் : 2வது இன்னிங்சில் கர்நாடகா திணறல்

திண்டுக்கல்: கர்நாடக அணியுடனான ரஞ்சி கோப்பை ‘எலைட்’ பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழகம் முதல் இன்னிங்சில் 307 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபாரமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 113 ரன் விளாசினார். என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன் குவித்து ஆல் அவுட்டானது (110.4 ஓவர்). அகர்வால் 43, படிக்கல் 78, தேஷ்பாண்டே 65, கோபால் 35, மத்தியாஸ் 26, கவுதம் 51 ரன் விளாசினர். தமிழக அணி பந்துவீச்சில் ஆர்.அஷ்வின் 4, விக்னேஷ், சித்தார்த் தலா 2, அபராஜித் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தமிழகம் 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்திருந்தது. தினேஷ் கார்த்திக் 23 ரன், ஜெகதீசன் 6 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். ஜெகதீஷ் 29 ரன், அஷ்வின் 11 ரன் எடுக்க, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய தினேஷ் கார்த்திக் சதம் விளாசி அசத்தினார்.

அவர் 113 ரன் எடுத்து (235 பந்து, 16 பவுண்டரி) கவுதம் பந்துவீச்சில் மாற்று வீரர் சுசித் வசம் பிடிபட, தமிழகம் முதல் இன்னிங்சில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விக்னேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கர்நாடகா பந்துவீச்சில் கவுதம் 6, ரோனித் மோரே 2, கவுஷிக், கோபால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 29 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து திணறி வருகிறது. படிக்கல் 29, ஷரத் 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, கர்நாடகா 118 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Tamil Nadu 307 ,innings ,stumps ,Karnataka , Tamil Nadu 307 ,all out, Karnataka stumps,2nd innings
× RELATED 178 ரன்னில் சுருண்டது வங்கதேசம் இலங்கை வலுவான முன்னிலை