×

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு: ஸ்பாட் பைனில் சேலம் எஸ்.ஐ முறைகேடு: * வசூலித்துவிட்டு சலானில் மாற்றி எழுதியது ஏன்? * துணை கமிஷனர் விசாரணை

சேலம்: சேலத்தில் ஸ்பாட் பைனில் பணத்தை வாங்கிவிட்டு, வாங்கவில்லை என சலானில் எழுதி எஸ்.ஐ மோசடி செய்யும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாநகரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பாட் பைன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் உடனடியாக அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மாநகரில் தினமும் போக்குவரத்து விதிகளை மீறும் ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து எஸ்.ஐ. ஒருவர், ₹200 அபராதம் வசூலித்து விட்டு, அதற்கான சலானில் பணம் வாங்கவில்லை (அன்பெய்டு) என ரசீது கொடுத்துள்ள காட்சியும், இதனை ஒருவர் கண்காணித்து, பணத்தை வாங்கிக் கொண்டு, பணம் வாங்கவில்லை என ரசீது கொடுத்தது ஏன்?  என  கேள்வி எழுப்பும் காட்சியும் வைரலாகி வருகிறது.  அதற்கு முறையாக பதில் அளிக்காத அந்த எஸ்.ஐ. அங்கிருந்து நழுவுகிறார். இவ்வாறாக 7 நிமிடத்திற்கும் மேல் அந்த காட்சி ஓடுகிறது. இந்த வீடியோ காட்சியில் இருப்பவர் சேலம் போக்குவரத்து எஸ்.ஐ. கோவிந்தராஜ் என்பதும், சேலம் சுந்தர் லாட்ஜ் பஸ் நிறுத்த பகுதியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கவனத்திற்கு வரவே, இது குறித்து மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் செந்திலை விசாரிக்க உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரமாக இது குறித்து அவர், கோவிந்தராஜிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதன்படி பார்த்தால் இந்த ஸ்பாட் பைன் திட்டத்தில் பெரும் மோசடி நடை பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பணத்தை கையில் வாங்கிக் கொண்டு, ஈ சலானில் வாங்கவில்லை என குறிப்பிடுவதால், அபராதத்திற்குரியவர் பணம் செலுத்தாமல் சென்று விட்டதாகவே கருதப்படும். இந்த மோசடியில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஈ சலான் மூலம் அபராதம் விதிக்கப்படும் தொகை மறுநாள் காலை கருவூலத்தில் செலுத்தப்படும். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்டு வாங்கவில்லை என ரசீது கொடுத்தது ஏன்? என்பது தெரியவில்லை. இதில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தால் குறிப்பிட்ட எஸ்.ஐ. மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.


Tags : Deputy Commissioner , Spot Pine, Salem SI, abuse, deputy commissioner, investigation
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...