×

தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் கைகோர்த்து செயல்படுகிறது உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை: மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும்  கைகோர்த்து செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் ராஜகண்ணப்பன் கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று முன்தினம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியவற்றில் சரியான இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடத்தாமல் தேர்தலில் குளறுபடி செய்து அறிவிப்பு செய்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது மோசமான நடவடிக்கையாகும்.எங்கு பார்த்தாலும் ஊராட்சி சாலைகள், பேரூராட்சி சாலைகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. உள்ளாட்சி நிர்வாகம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலைவிட தமிழக ஆட்சியாளர்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் அதிகமான கோபத்தில் உள்ளனர். நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசும்போது, குடியுரிமை சட்ட மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசியிருப்பது திமுகவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து காட்டுகிறது. நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவது உறுதி. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தலைமையிலான கூட்டணி தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அதிமுக அமைச்சரான ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் விரைவில் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார்.

Tags : elections ,Election Commission ,Government of Tamil Nadu ,DMK ,Government ,MK Stalin , Election Commission, Government of Tamil Nadu, Local Government Election, DMK, MK Stalin, Rajagannappan
× RELATED தேர்தல் பிரசாரங்களில் விமானம்,...