குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய அரசு மீது கமல் தாக்கு

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருந்தால், அதை  திருத்தும் கடமை நமக்கு இருக்கிறது. ஆனால், பிழை இல்லாத நல்ல அமைப்பை திருத்த  முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். நோயில்லாத மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்துக்கு நிகரானது, இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும், திட்டமும், இந்தியாவை  ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயற்சிப்பது மடமை.  காந்தியின் 150வது பிறந்தநாளை அவரது மறைவு நாளாக மாற்றிவிட்டால், அவர் கனவு கண்ட இந்தியா உரு தெரியாமல் அழிந்துவிடுமா என்ன? முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர்.

இது பாமர இந்தியா அல்ல, உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க. இளம் இந்தியா, விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும். எங்கள் தாய்நாட்டை தந்தையர் நாடாக மாற்ற முயலும் பிதாமஹாக்களுக்கு இது புரிய வேண்டும். மய்யத்தின் வாதம், இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் கலந்து பசியாறும் சந்தர்ப்பவாதம் அல்ல. நமக்கு பிறகும் நல்லதே நடக்க வித்திடும் சிந்தனைகளை பற்றித்தொடரும் பெருங்கூட்டம் நாம். அந்த சிந்தனைகளை மய்யம் கொள்ளச் செய்ய சூளுரை ஏற்றவரே எம் மய்யத்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: