×

ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: இஸ்ரோவின் ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோள்கள் என மொத்தம் 10 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் நேற்று விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 27ம் தேதி புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின்  13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி முடிந்து, விண்ணில் ஏவுவதற்கான 22 மணி 45 நிமிட கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது.

திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நேற்று மாலை 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 37 டிகிரி கோணத்தில் 576 கி.மீ உயரத்தில் அதன் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ரிசாட் -2பிஆர்1 செயற்கைகோளுடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 1 செயற்கைகோளும், அமெரிக்காவுக்கு சொந்தமான 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, வனப்பகுதி கண்காணிப்பு, பேரிடர் கால  கண்காணிப்பு  உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட 75வது ராக்கெட். அதேபோல, பிஎஸ்எல்வி வகை ராக்கெட்களில் இது 50வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 2019ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவும் 6வது ராக்கெட். 10 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டதும் இஸ்ரோ தலைவர் சிவன் விஞ்ஞானிகளை பாராட்டினார். விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 10 செயற்கைகோள்கள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், இஸ்ரோ தலைவர் சிவன் பேசியதாவது: பிஎஸ்எல்வி ராக்கெட் தனது 26ம் ஆண்டு பயணத்தில் 1.9 டன் எடை வரை  செயற்கைகோள்களை கொண்டு செல்லும் அளவுக்கு செயல்திறன் அதிகப் படுத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பூமியிலிருந்து 576 கி.மீ உயரத்தில் ரிசாட் 2 பி ஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி -சி48 வெற்றிகரமாக நிறுத்தியுள்ளது. இந்த 26 ஆண்டுகள் பயணத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் இந்த அளவிற்கு செயல்திறன் மிக்கதாக மாற்றியதில் இதற்கு முன் இஸ்ரோவில் பணியாற்றிய ராக்கெட் ஏவுதல் குழு ஒட்டுமொத்த பிஎஸ்எல்வி குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த வெற்றியில் பங்கு உள்ளது. அதனால் இந்த தருணத்தில் மற்றும் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், சீனிவாசன் உட்பட இஸ்ரோவின் தலைவர்களாக இருந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.

பிஎஸ்எல்வி -சி48 ராக்கெட்டின் மொத்த எடையில் 56 சதவீத எடை வெளி நாடுகளின் செயற்கைகோள்கள் கொடுக்கப்பட்டது. இஸ்ரோவின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று சொன்னாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. விரைவில் சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்.  2019ம் ஆண்டில் செலுத்தி உள்ள அனைத்து ராக்கெட் களையும் வெற்றிகரமாக செலுத்த உதவிய அனைவருக்கும் நன்றி. அடுத்த 5 ஆண்டுகளில் 100வது பிஎஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இனிவரும் காலங்களில் அனைத்து ராக்கெட்களையும் வெற்றிகரமாக செலுத்துவதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிஎஸ்எல்வி 50 புத்தகம் வௌியீடு
பிஎஸ்எல்வி ராக்கெட் இதுவரை 50 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பிஎஸ்எல்வி 50 என்ற புத்தகத்தை இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட, விஞ்ஞானி சோம்நாத் பெற்றுக்கொண்டார். இதில், 50 ராக்கெட்டுகளில் செலுத்தப்பட்ட செயற்கைகோள்களின் விவரம், அவற்றை வெற்றிகரமாக செலுத்த பணியாற்றிய விஞ்ஞானிகள் அடங்கிய விவரங்களும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மாணவர்களுக்குசிவன் பாராட்டு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி -சி48 ராக்கெட்டில் இஸ்ரேல் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய டச்சிசாட் 3 என்ற தொலையுணர்வு என்கிற நானோ செயற்கைகோளும் அனுப்பப்பட்டது. பிற நாட்டு விஞ்ஞானிகள் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு முன்னதாக ஹரிகோட்டா வந்திருந்தனர். அவர்களை போலவே டச்சி சாட்டை உருவாக்கிய இஸ்ரேல் பள்ளி மாணவர்கள் 4 பேர் வந்திருந்தனர். இஸ்ரோ தலைவர் சிவன் அந்த 4 பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை வெகுவாக பாராட்டினார்.

Tags : Risat-2 PR1 Satellite, BSLV-C48 Rocket
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...