கீழடி அகழாய்வு 3 கட்ட ஆய்வறிக்கைகள் தாமதம் தொல்லியல் துறையின் அலட்சியமே காரணம்: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: கீழடி அகழாய்வு 3 கட்ட ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதற்கு மத்திய தொல்லியல் துறையின் அலட்சியம் தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கீழடியில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்ட அகழாய்வின் முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. இவற்றை வெளியிட உயர் நீதிமன்றம் இருமுறை விதித்த கெடுவும் முடிந்து விட்ட நிலையில், அகழ்வாராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படாதது வருத்தமளிக்கிறது. முதற்கட்ட ஆய்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு அரசியல் காரணங்களை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது. ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டிய அமர்நாத் கோவாவில் பணியில் உள்ளார். அவருக்கு உதவ வேண்டிய பணியாளர்கள் கர்நாடகத்திலும், ஆந்திரத்திலும் உள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொருட்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்களை ஒருங்கிணைக்க மத்திய தொல்லியல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, ஆய்வறிக்கை தயாரிப்பு பணிகள் நடைபெற்று விடாமல் தடுப்பதற்கான சதிகளை சில சக்திகள் திரைமறைவில் இருந்து செய்து கொண்டு வருகின்றன. கீழடி அகழாய்வு அறிக்கைகள் இன்று வரை வெளியிடப்படாததற்கு இத்தகைய சதிகள்தான் காரணம்.

தமிழர் நாகரிகம்தான் உலகின் மூத்த நாகரிகம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைக்கும் ஒரு தரப்பினர்தான் இத்தகைய முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். தமிழர்களின் பாரம்பரியப் பெருமையை யாரோ சிலர் மறைக்க நினைப்பதை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, முதல் மூன்று கட்ட ஆய்வு அறிக்கைகளை விரைந்து வெளியிடச் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வுகளை ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதத்தில் தமிழக அரசு தொடங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: