காங்கிரசிலிருந்து ராயபுரம் மனோ விலகினார்

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து முக்கிய பிரமுகராக விளங்கிய ராயபுரம் மனோ திடீரென விலகியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தமிழக காங்கிரஸ் கட்சியில் 13 ஆண்டுகளாக வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் ராயபுரம் மனோ. கவுன்சிலராக பதவி வகித்த அவர் 3 முறை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டவர். காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய நிலையில், அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால் அவர் காங்கிரசில் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று அவர் நடத்திய நிகழ்ச்சியில், தான் காங்கிரஸ் கட்சியில் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து, ராயபுரம் மனோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காங்கிரஸ் தலைமைக்கும், கட்சி நண்பர்களுக்கும் நான் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்ட தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் என்ற முறையில் பலநூறு இயக்க நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். கட்சி தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி அவர்கள் பெருமைகளை, சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றேன்.  இந்த இயக்கம் வலுவான இயக்கமாக உருப்பெற்று தமிழகத்தை ஒரு நாள் ஆள வேண்டும் என்று என்னை முழுமையாக அர்ப்பணித்தேன். 30 ஆண்டுகளாக நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக மன நிறைவுடன் பணியாற்றினேன். எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிற காரணத்தினால் காங்கிரசிலிருந்து விலகி பார்வையாளராக செயல்பட ஆசைப்படுகிறேன். காங்கிரசில் மனநிறைவோடு பணியாற்றினேன். இன்று மனநிறைவோடு விடைபெறுகிறேன்.

 இதுநாள் வரை எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து தலைவர்களுக்கும், என்னோடு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரசில் இருந்து விலகுகிறேன். ஆனால் எனது மக்கள் நலப்பணி தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: