குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் வரும் 14ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 14ம்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, முன்னாள் எம்எல்ஏ கோ.பழனிசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் சி.மகேந்திரன், மு.வீரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆறுமுகம், பெரியசாமி, சிவபுண்ணியம், பத்மாவதி, ராமசாமி, முன்னாள் எம்பிக்கள் அழகர்சாமி, பொ.லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

 உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்தும் முறையில், அதனை மகத்தான வெற்றி பெறச் செய்வது,  கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து கூட்டணித் தலைமையோடு பேசி இறுதிபடுத்தி வேட்புமனு தாக்கல் செய்வது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை தகர்க்கும் வகையில், மத்திய பாஜ அரசு  குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.  வெறுப்பு அரசியலின் விஷ விதையான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வரும் 14ம்தேதி  சனிக்கிழமை தமிழ்நாட்டின் மாநகர்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: