தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு

லாகூர்: தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட நால்வர் மீது பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர், குஜ்ரன்வாலா, முல்தான் ஆகிய இடங்களில் தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதற்காக அறக்கட்டளைகள், லாப நோக்கமற்ற அமைப்புகளின் பெயரில் நிலங்கள் மற்றும் சொத்துகளை பெற்றதாக, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவனான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் அவர்கள் மீது 23 வழக்குகளை பதிவு செய்தனர். இதன்பேரில் கைது செய்யப்பட்ட சயீத், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஹபீஸ் சயீத், ஹபீஸ் அப்துல் சலாம் பின் முகமது, முகமது அஷ்ரப், ஜாபர் இக்பால் ஆகியோருக்கு எதிராக தீவிரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக நீதிபதி அர்ஷத் உசேன் பூட்டா முன்னிலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். வழக்கம் போல, நேற்றைய விசாரணையின் போதும் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: