கொலுசை அடகு வைத்து குடித்ததால் ஆத்திரம்: மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கணவன் சீரியஸ்.. விழுப்புரம் அருகே பயங்கரம்

விழுப்புரம்: கொலுசை அடகுவைத்து குடித்ததால் மனைவியால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கணவன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில் (36). இவர் கொத்தனார். இவரது மனைவி சித்ரா (32). இவர்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். தம்பதிக்கு வெற்றிவேல் (12), ஹரீஷ் (10) என்ற மகன்கள் உள்ளனர். இவர்கள் முறையே அங்குள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5ம் வகுப்பும் படித்து வருகின்றனர். செந்தில் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது. மனைவி கண்டித்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று சித்ரா கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில், செந்தில் வீட்டில் தனியாக இருந்தார்.

Advertising
Advertising

அப்போது குடிக்க பணம் இல்லாததால் வீட்டில் இருந்த சித்ராவின் வெள்ளிக்கொலுசை எடுத்து 1500 ரூபாய்க்கு அடகு வைத்து அந்த பணத்தில் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சித்ரா கொலுசை காணாமல் அதிர்ச்சி அடைந்து இதுபற்றி கணவனிடம் கேட்டபோது அடகு வைத்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்பிறகு போதையில் இருந்து செந்தில் தூங்கி விட்டார்.  ஆனாலும் சித்ராவுக்கு ஆத்திரம் தீரவில்லை. வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்திலின் பைக்கில் இருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று தூங்கிக்கொண்டிருந்த செந்தில் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார்.

இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் செந்தில் அலறி துடித்தார். இதனால் பயந்துபோன சித்ரா அக்கம் பக்கத்தினரை அழைத்தார். யாரும் வராததால் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸ் வந்ததும் உயிருக்குப்போராடிய செந்திலை மீட்டு அதில் ஏற்றி புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: