×

நாட்டு வெங்காயத்தை போல் சுவை இல்லாததால் கோவையில் எடுபடாத எகிப்து வெங்காயம்

கோவை: நாட்டு வெங்காயத்தை போல சுவையிருக்காது என்று எகிப்து வெங்காயம் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால் காய்கறி கடைகளில் எகிப்து வெங்காயம் எதிர்பார்த்த விற்பனை இல்லாமல் தேங்கியுள்ளது.
நாட்டின் வெங்காய தேவையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களே பெருமளவு பூர்த்தி செய்து வருகின்றன. நடப்பாண்டு அதிகளவில் மழை பெய்ததால் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்கள் அழுகி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இதன்விளைவாக நாடெங்கிலும் வெங்காயத்தின் விலை மள மளவென உயர்ந்தது. சில இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.300 வரை விற்பனையானது. கோவையில் கடந்த வாரம் ஒருகிலோ வெங்காயம் ரூ. 150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதனால் மக்கள் வெங்காயத்தை குறைந்த அளவே சமையலுக்கு பயன்படுத்தினர். அதேபோல உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் வெங்காயத்திற்கு மாற்றாக காய்கறிகளை பயன்படுத்த துவங்கினர். வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. கடந்த வாரம் 40 ஆயிரம் டன் வெங்காயம் மும்பை துறைமுகத்திற்கு வந்தது. இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயத்தை மகாராஷ்டிர வியாபாரிகள் வாங்கி சுமார் 50 டன் வெங்காயத்தை கோவை வியாபாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல நேற்று மகாராஷ்டிராவில் இருந்து 25 டன் கொள்ளளவு கொண்ட 15 கன்டெய்னர்களில் 375 டன் புதிய வெங்காயம் கோவை மார்க்கெட்டுக்கு வந்தது. இதனால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

கோவை எம்.ஜி.ஆர் மொத்த விற்பனை மார்க்கெட்டில் ஒரு கிலோ எகிப்து வெங்காயம் ரூ.80க்கும், புது வெங்காயம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 க்கும், பழைய வெங்காயம் ரூ.120க்கும், சின்ன வெங்காயம் ரூ.100க்கும், சின்ன பெல்லாரி ரூ.50 லிருந்து ரூ.60 வரை விற்பனையானது. சில்லரை விற்பனை மார்க்கெட் மற்றும் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 முதல் ரூ.120 க்கும், பெரிய வெங்காயம் ரூ.90 முதல் ரூ.130 க்கும் விற்பனையானது. வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எகிப்து வெங்காயம் கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டாலும் பொதுமக்கள் அந்த வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எகிப்து வெங்காயம் பார்ப்பதற்கு பெரிதாக இருக்கிறது.

இதனால் கிலோவுக்கு 4 முதல் 5 வெங்காயமே நிற்கிறது. நாட்டு வெங்காயத்தை போல காரமும், சுவையும் இருக்காது, மேலும் அதிகளவில் எண்ணெய் குடிக்கும் என்பதால் எகிப்து வெங்காயம் வாங்கவில்லை’’ என்றனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘புதிதாக வரும் பொருட்களை வாங்க பொதுமக்களிடம் எப்போதும் தயக்கம் இருக்கும். எகிப்து வெங்காயத்தில் காரம் இருக்காது என்பது தவறான புரிதல், அதுவும் இந்திய வெங்காயத்திற்கு இணையான காரத்துடன் தான் இருக்கிறது. எகிப்து வெங்காயத்தின் நிறம் மட்டும் நம் நாட்டு வெங்காயத்திலிருந்து மாறுபட்டு ஆரஞ்ச் கலந்த நிறத்தில் உள்ளது,’’ என்றனர். கடந்த வாரங்களை விட தற்போது, எகிப்து வெங்காயம் உட்பட மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.

Tags : Egyptian ,Coimbatore , Country Onions, Coimbatore, Egypt Onions
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு