×

நாகர்கோவிலில் நள்ளிரவு வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதம்: செயல் இழந்து காட்சி பொருளாக நின்றது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் நள்ளிரவில் வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் சரிந்தது. இந்த சிக்னல் கம்பம் ஏற்கனவே செயல் இழந்து காட்சி பொருளாக நின்றது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள், காசி விஸ்வநாதர் கோயில் வழியாக வந்து வலது புறம் திரும்பி எம்.எஸ். ரோட்டில் பயணிக்கின்றன. இதில் காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இருந்தது. இந்த சந்திப்பு மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாகும். இந்த பகுதியில் போலீஸ் நிழற்குடையும் செயல்பட்டது. காலப்போக்கில் சிக்னல் செயல் இழந்து காட்சி பொருளாக மாறியதால், போலீஸ் நிழற்குடையும் பராமரிப்பு இல்லாமல் போனது.  பின்னர் போலீசாருக்கான நிழற்குடை அகற்றப்பட்டது. காலை மற்றும் மாலை வேளையில் அதிகமாக போக்குவரத்து நெருக்கடி உள்ளது. இந்த பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் சில கடைகளை அப்புறப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான பணிகள் நடந்தன. ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் தற்போது அதிக நெருக்கடியாக உள்ளது.  டிராபிக் போலீஸ்காரர், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். திருநெல்வேலி மார்க்கமாக செல்ல வேண்டிய பஸ்கள் காசி விஸ்வநாதர் கோயில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி எம்.எஸ். ரோட்டுக்கு வருவதற்கு கடும் சிரமமாக இருக்கிறது. சில சமயங்களில் இந்த சந்திப்பு பகுதியில் உள்ள கடைகளின் முன்பு ஆட்டோக்கள், கார்கள், பைக்குகள் நிறுத்தப்படுவதால், பஸ்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு, இந்த பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் வாகனம் மோதி சரிந்தது.

இதில் டெலிபோன் கேபிள்கள் அறுந்தன. தற்போது சரிந்த நிலையில் சிக்னல் கம்பம் உள்ளது. இந்த பகுதியில் சிக்னல் கம்பத்தை அகற்றி, இடையூறாக உள்ள மின் கம்பங்களையும் அகற்றி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள், பஸ்கள் எளிதில் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன், வாகனங்களை ஒழுங்குப்படுத்த போதிய அளவில் டிராபிக் போலீசார் அல்லது ஊர்க்காவல் படையினரை காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : NAGARKOVILLE ,vehicle collision , In Nagercoil, traffic signal pole, damage
× RELATED நாகர்கோவிலில் கேலோ இந்தியா விழிப்புணர்வு மாரத்தான் போட்டி