×

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள நடவடிக்கை: 10,000 அதிநவீன அமெரிக்க துப்பாக்கிகள்...இந்திய ராணுவத்தினருக்கு வழங்கல்

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் புதிதாக கிடைக்கப்பெற்ற, அதிநவீன துப்பாக்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ வீரர்களுக்கு 72,400  புதிய SiG 716 எனும் நவீன ரக துப்பாக்கிகளை அமெரிக்காவின் Sig Sauer நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த ஒரு ஆண்டிற்குள் விரைவாக கொள்முதல்  செய்யப்படும் வகையில் இந்த துப்பாக்கிகளை இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டு இந்த துப்பாக்கிகள் இந்தியாவிற்கு  கொண்டுவரப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக தற்போது 10,000 எண்ணிக்கையிலான SiG 716 ரக துப்பாக்கிகள் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இவை வடக்கு பிராந்தியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வடக்கு  பிராந்திய படைப்பிரிவினர் தான் பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர். எல்லை பகுதிகளில் தீவிரவாத தடுப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளில் தற்போது  புதிய ரக SiG 716 துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிகள் மட்டுமல்லாது 21 லட்சம் ரவுண்டு துப்பாக்கி குண்டுகளும் ராணுவ பயன்பாடிற்காக வாங்கப்படுகிறது. இந்த ஆயுதங்களும் வரத்தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக வாங்கப்படும் 72,000 துப்பாக்கிகளில் 66,000  ராணுவத்தினருக்காகவும், விமானப்படைக்கு 4,000 துப்பாக்கிகளும், கப்பற்படையினருக்கு மீதமும் ஒதுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள இந்திய தயாரிப்பான Insas துப்பாக்கிகளுக்கு மாற்றாக SiG 716 ரக துப்பாக்கிகள் இருக்கும். மேலும் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து 7 லட்சம் AK-203 ரக துப்பாக்கிகள் தயாரித்து இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு  கொண்டுவரப்படும் என்றும் தெரியவந்துள்ளது.

Tags : militants ,Jammu and Kashmir ,Indian Army ,US , Measures to confront militants in Jammu and Kashmir: Indian Army supplies 10,000 sophisticated rifles
× RELATED ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில்...