மூணாறு - உடுமலைப்பேட்டை இடையே நெடுஞ்சாலையில் உலா வரும் புலிகள்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

திருவனந்தபுரம்: மூணாறு அருகே தமிழக எல்லைைய ஒட்டிய நெடுஞ்சாலையில் 2 புலிகள் சாவகாசமாக நடமாடியது பயணிகளை கடும் பீதியில் ஆழ்த்தியது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மூணாறு அருகே சின்னாறில் புலிகள் சரணாலயம் உள்ளது. ஆகவே இந்த பகுதியில் ஏராளமான புலிகள், யானைகள் உள்பட விலங்குகள் அதிகமாக உள்ளன. சின்னாறு அருகே மாட்டுப்பெட்டியில் மக்கள் வசிக்கும் பகுதியில் காட்டு யானை ஒன்று அடிக்கடி வந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

இது தவிர அந்த பகுதியில் உள்ள வாழை உள்பட பயிர்களை நாசம் செய்து வருகிறது. பகல் நேரத்திலும் யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. ஆகவே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சின்னாறு பகுதியில் உள்ள மூணாறு - உடுமலைப்பேட்டை நெடுஞ்சாலையில் 2 புலிகள் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் இந்த சாலையில் எப்போதும் வாகனப்போக்குவரத்து அதிகம் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் 2 புலிகள் சர்வசாதாரணமாக இந்த சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தன.

அந்த வழியாக வந்தவர்கள் உடனடியாக வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டனர். அவர்கள் பயத்தில் நெஞ்சம் படபடக்க காத்திருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்தவர் தனது செல்போனில் புலிகள் செல்வதை வீடியோ எடுத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த புலிகள் ரோட்டிலேயே நடமாடி கொண்டிருந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகே புலிகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதையடுத்து நிம்மதி பெருமூச்சு விட்ட வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். புலிகள் சாலையில் நடமாடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Stories: