ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்கள் அசாம் மாநிலத்திற்கு மாற்றம்

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கிருந்து பாதுகாப்பு படை வீரர்களில் ஒரு பிரிவினர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதையொட்டி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, அங்கு பாதுக்காப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் விதமாக துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். இணையதள முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அங்கு பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சுமார் 5 மாதங்கள்  ஆகியுள்ள நிலையில், காஷ்மீரில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என்பதால், பாதுகாப்பு படை வீரர்களை திரும்ப அழைக்க மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதில் முதல்கட்டமாக 10 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அசாம் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் 20 கம்பெனி வீரர்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில், கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள் முழுவதுமாக திரும்பபெறப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: