ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல்: மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி பேச்சு

டெல்லி: ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீட்டை ரத்து செய்வது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என மக்களவையில் தி.மு.க எம்பி கனிமொழி குற்றம் சாடினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர்,

பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை. இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பேசிய தி.மு.க மக்களவை குழுத் துணைதலைவர் கனிமொழி; ஆங்கிலோ இந்தியன் இடஒதுக்கீடு ரத்து செய்யும் மசோதா அடிப்படை உரிமைகளை பறிக்கிறது என கூறினார். 13 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். தென் மாநிலங்களில் மட்டும் 5 ஆங்கிலோ இந்தியன் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மை இருப்பதற்காக சிறுபான்மையினரை துன்புறுத்தலாம் என அர்த்தமில்லை.

இந்த மசோதவை கொண்டு வருவதற்கு முன்பு மேற்குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுகளிடம் ஆலோசிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தங்களது பங்கை செலுத்தி வருகின்றனர். ரயில்வே மற்றும் அரசு துறைகளிலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது எனவும் கனிமொழி குறிப்பிட்டு பேசினார்.

Related Stories: