×

தெற்காசியாவிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாகக் குறையும்: ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

டெல்லி: நடப்பு நிதியாண்டில் 2019-2020ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 5.1 சதவீதமாகக் குறைத்து ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது. இதற்கு முன் 6.5 சதவீதமாகக் கணித்திருந்த நிலையில் தொடர்ந்து இரு காலாண்டுகளாக உள்நாட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி அடைந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக் கணித்துள்ளது. ஆசிய மேம்பாட்டு வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவு. எனவே நடப்பு நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். கடந்த 2018-ம் ஆண்டில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடும் நிதி நெருக்கடியிலும், கடன் வழங்குவதில் பிரச்சினைகளைச் சந்தித்தது வளர்ச்சிக் குறைவுக்கு முக்கியக் காரணமாகும். மக்களின் நுகர்வுப் பழக்கம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தில் மந்த நிலை, கிராமப்புறங்களில் பொருளாதாரத் தேக்கம், விவசாயம் தொடர்பான பிரச்சினை, கடன் வழங்குவதில் பற்றாக்குறை போன்றவற்றால் வளர்ச்சி குறைந்துள்ளது.

ஆனால் 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள பொருளாதார நடவடிக்கைகளான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிக் குறைப்பு, வங்கிகளுக்கு மறுமுதலீடு அதிகரிப்பு, முதலீடு வரத்து அதிகரிப்பு, கடனுக்கான வட்டிக் குறைப்பு போன்றவை அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. தனியார் துறை நுகர்வு 4.1 சதவீதமாகவும், முதலீடு 2.5 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் 5.8 சதவீத வளர்ச்சி இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகவும் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பின் மிக்க குறைந்த பொருளாதார வளர்ச்சியாகும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன் செப்டம்பர் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ரிசர்வ் வங்கி கடந்த வாரம் நடந்த நிதிக்கொள்கை கூட்டத்தில் நாட்டின் நடப்பு பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைத்துக் கணித்தது. முன்னதாக சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதமாகவும், உலக வங்கி 6 சதவீதமாகவும் சரியும் என்று கணித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 6.1 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டில் 5.8 சதவீதமாகவும் வீழ்ச்சி அடையும் என்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.

Tags : India ,Asian Development Bank ,South Asia , South Asia, India, economic growth slows to 5.1%, Asian Development Bank
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்…