பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி..இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோ தலைவர் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.எல்.வி-சி48

புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து மாலை 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. சில நிமிடங்களிலேயே பூமியிலில் இருந்து 576 கி.மீ தொலைவில் பிஎஸ்எல்வி சி-48 நிலைநிறுத்தப்பட்டது.

இந்தியாவிற்கு சொந்தமான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும். மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ள 75வது ராக்கெட் மற்றும், பி.எஸ்.எல்.வி ரகத்தில் விண்ணில் ஏவப்பட்டுள்ள 50வது ராக்கெட் என்ற பெருமைகளை பெற்றுள்ளது. இதேபோல், 2019ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணில் ஏவிய 6வது ராக்கெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ சிவன் பேட்டி

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75வது ராக்கெட் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 50வது ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி-48 10 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது. பிஎஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 50வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த தருணத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி. இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரின் பெயரை கூறியும் இஸ்ரோ தலைவர் சிவன் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: