மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ராணுவ நிதியை பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை

வாஷிங்டன்: மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ராணுவ நிதியை பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. அகதிகள் வருகையை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் கட்டப்படும் என அதிபர் டிரம்ப் தனது தேர்தல் பரப்புரையின் போதே கூறியிருந்தார். இதற்கான நிதியை ஒதுக்கும்படி நாடாளுமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்த போது, ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

இதன் மூலம் ராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அவர் பயன்படுத்த முடியும். அதன்படி எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 10 ஆயிரத்து 406 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியாக ஒதுக்க அமெரிக்க ராணுவ தலைமையகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் சார்பில் 20 மாகாணங்களின் மத்திய கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. 

இதில் கலிபோர்னியா மாகாணத்தில் மத்திய கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி எஸ்.கில்லியம் விசாரித்தார். அப்போது அவர் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்துக்கு ராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு டிரம்புக்கு பின்னடைவாக கருதப்படும் நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: